நான் உன்னை நேசிக்கப் பிறந்தவன்
(I WAS BORN TO LOVE YOU)
பீட்டர் லீ எழுதியது

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நான் சொத்து திட்டமிடல் (Estate Planning) துறையில் பணியாற்றி வருகிறேன். இருப்பினும், மனநல அல்லது அறிவுத்திறன் குறைபாடு கொண்ட குடும்ப உறுப்பினர்களும், பொருளாதார சிரமங்களும் ஒன்றாக இணைந்திருக்கும் சிக்கலான வாரிசுரிமைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நண்பர்களையும் வாடிக்கையாளர்களையும் பார்க்கும்போது, அவர்களுக்கு உடனடியாக உதவ முடியாமல் நான் உதவியற்றவனாக உணர்ந்த தருணங்கள் பல உள்ளன.
ஒருநாள், எனது நண்பர் ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு, ஈப்போவிற்கு அருகில் சிறப்புத் தேவைகள் கொண்ட தனது முப்பது வயது மருமகனை பராமரிக்கக்கூடிய நலவாழ்வு இல்லம் ஏதேனும் தெரியுமா என்று கேட்டார்.
நான், ஒரு அரசு சாரா இயக்கத்தை (NGO) தொடர்புகொண்டு பொருத்தமான இல்லத்தை பரிந்துரைக்க முயற்சிப்பதாக கூறினேன். ஆனால் அதற்கு முன், “அவருடைய பெற்றோருக்கு என்ன ஆனது?” என்று கேட்டேன்.
அதற்கு அவர் கூறிய பதில் என்னை மிகவும் கவலைக்குண்டாக்கியது.
அவருடைய மருமகனின் தாய், அந்தச் சிறுவன் சில வயதிலேயே காலமானார். அதன் பிறகு, தந்தை தனது மகனை ஒரு குழந்தையைப் போலவே பராமரித்து வந்தார். உறவினர்கள் பலமுறை, அவனுக்கு தானாக உணவு உண்ணுதல், தனிப்பட்ட சுத்தம் பேணுதல் போன்ற அடிப்படை வாழ்க்கைத் திறன்களை கற்றுக் கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் அன்பின் காரணமாக, தந்தை அவனை எப்போதும் பாதுகாத்துக் கொண்டே இருந்தார். திடீரென அவர் இறந்தப்போது, மகன் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைத் திறன்களைக்கூட கற்றுக்கொள்ளாத நிலையில் இருந்தான்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு, பகுதி நேர வேலை செய்து குறைந்த வருமானத்தில் வாழ்ந்து வந்த என் நண்பரே, அந்த மருமகனின் ஒரே ஆதரவாக மாறினார்.
அதன்பிறகு, சுமார் மூன்று வாரங்கள் அவர் பல நலவாழ்வு இல்லங்களைத் தேடி அலைந்தார். அந்த நாட்களில், அந்த இளைஞர் பேராக் மாநிலத்தின் செந்தேரியாங் (Chenderiang) கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாகவே இருந்தார்.
இதிலும் பெரிய சிக்கல் என்னவென்றால், என் நண்பரின் சகோதரர் உயில் (Will) எழுதாமல் காலமானார்.
அவருடைய வங்கிக் கணக்குகளில் பணம் இருந்தது. மேலும், ஊழியர் சேம நல நிதி EPF (Employees Provident Fund / KWSP)–இல் எந்த நியமனமும் (Nomination) செய்யப்படவில்லை.
இதனால், தனது மருமகனின் பராமரிப்புக்குத் தேவையான செலவுகளைச் சந்திக்க, அந்தச் சொத்துகளை எவ்வாறு சட்டபூர்வமாகப் பெறுவது என்று என் நண்பருக்கு தெரியவில்லை.
நான் அவரிடம், மலேசிய உயர்நீதிமன்றத்தின் மூலம் Letter of Administration (LA) பெற விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என்று விளக்கினேன்.
மலேசியாவின் Distribution Act 1958 (1997-ஆம் ஆண்டு திருத்தம்) படி, ஒருவர் மனைவி, பெற்றோர் மற்றும் பிள்ளைகளை விட்டுச் சென்றால், சொத்துப் பகிர்வு சட்டப்படி பின்வருமாறு அமையும்:
- மனைவிக்கு – 1/4
- பெற்றோருக்கு – 1/4
- பிள்ளைகளுக்கு – 1/2
ஆனால் இந்தச் சம்பவத்தில், தாயாரும், தாத்தா பாட்டியும் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டதால், அந்தச் சிறப்புத் தேவைகள் கொண்ட மகனே சட்டப்படி சொத்தின் 100% உரிமையாளராக இருந்தார்.
ஆனால், நீதிமன்ற நடைமுறை மிகவும் நீண்டதும் சிக்கலானதுமாக இருந்தது.
முதலில், மனைவியும் பெற்றோரும் ஏற்கனவே இறந்துவிட்டார்கள் என்பதை நிரூபிக்க, அவர்களுடைய மரணச் சான்றிதழ்களைப் பெற்றுத் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.
அதன் பிறகு, தனது மருமகன் மனநிலை காரணமாக தனது சொத்துக்களைத் தானே நிர்வகிக்க முடியாதவர் என்பதை நிரூபிக்கும் மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
இதற்குப் பிறகே, என் நண்பர் சட்டப்படி அந்தச் சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாகி Administrator ஆக நியமிக்கப்பட முடிந்தது.
என் தொழில் அனுபவத்தில், இது புதிதான சம்பவமல்ல.
பல குடும்பங்கள், பிரச்சினை தங்கள் கண்முன்னே இருந்தபோதும், சொத்து திட்டமிடலை தொடர்ந்து தள்ளிப்போடுகின்றன.
அவர்கள், “எப்படியோ எல்லாம் சரியாகிவிடும்” என்ற மனநிலையிலேயே வாழ்கிறார்கள்.
ஆனால் உண்மையில், அவர்கள் தங்களுடைய உறவினர்களுக்கே ஒரு நிதி மற்றும் நிர்வாக வெடிகுண்டை விட்டுச் செல்கிறார்கள். அதனை சமாளிக்க அவர்கள் தயாராக இருப்பதில்லை.
போதுமான செல்வம் கொண்ட குடும்பங்கள்கூட இந்த முக்கியமான திட்டமிடலை புறக்கணித்து விடுகின்றன.
உங்கள் குடும்பத்தில் சிறப்புத் தேவைகள் கொண்ட ஒருவர் இருந்தால், முன்னரே திட்டமிடுவது மிகவும் அவசியம்.
முதலில், அவரைப் பராமரிக்க மனமுள்ள பாதுகாவலர் (Guardian) மற்றும் நம்பிக்கையாளர் (Trustee) யாரென்பதை குடும்பத்துடன் வெளிப்படையாகப் பேசி முடிவு செய்யுங்கள்.
அடுத்ததாக, அவர்களிடம் அந்தப் பொறுப்பை ஏற்கத் தேவையான நிதி இருப்பதை உறுதிப்படுத்துங்கள். உதாரணமாக, உங்கள் மறைவுக்குப் பிறகு சட்ட நடைமுறைகள் முடிவடையும் வரை காத்திருக்காமல் உடனடியாக பயன்படுத்தக்கூடிய கூட்டு வங்கிக் கணக்கு (Joint Bank Account) போன்ற ஏற்பாடுகளைச் செய்யலாம்.
பொருளாதார சுமை இல்லையென்பதை அறிந்தால், உறவினர்கள் இந்தப் பொறுப்பை ஏற்க அதிக மனதுடன் முன்வருவார்கள்.
மேலும், குடும்ப உறுப்பினர்களால் தினசரி நேரடி பராமரிப்பு வழங்க இயலாவிட்டால், நீங்கள் உயிருடன் இருக்கும்போதே நம்பகமான பராமரிப்பு இல்லம் அல்லது சிறப்புத் தேவைகள் மையத்துடன் முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்து வையுங்கள்.
சொத்து திட்டமிடல் மூலம், உங்கள் விருப்பப்படி Executor, Guardian ஆகியோரை நியமிக்கலாம். அதோடு, Testamentary Trust (உயிலின் மூலம் உருவாக்கப்படும் அறக்கட்டளை) அமைத்து, உங்கள் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் வழங்கலாம்.
இத்தகைய முடிவுகளை எடுப்பது எளிதல்ல.
ஆனால், பெற்றோர்களாகிய நாம் அனைவரும் நம் பிள்ளைகளுக்கு சிறந்த வாழ்க்கையையே விரும்புகிறோம்.
அதற்காக இன்று திட்டமிடுவது, அந்தப் பாடலின் தலைப்பைப் போல, காலம் கடந்தும் நிலைத்திருக்கும் ஒரு செய்தியைச் சொல்லுகிறது:
“நான் உன்னை நேசிக்கப் பிறந்தவன்.”