Share This Post

Author: Peter Lee
Tamil Translation: Mr. Christopher A/L Arulsamy

சமீபத்தில் ஒரு குடும்பம் என்னை அணுகி, அவர்களது வயதான தாய் உயில் (Will) தயாரிக்க முடியுமா எனக் கேட்டார்கள். இயல்பாகவே, நான் கேட்ட முதல் கேள்வி, “உங்கள் தாயார் எங்கே இருக்கிறார்?” என்று.

அவர்கள் கூறியது, அவர் தற்போது ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பதாகவும், நேரில் வர முடியாத நிலையில் இருப்பதாகவும், அவர்கள் கூறிய விவரங்களிலிருந்து அவர் தற்போது சொல்வதை விளங்கக்கூடிய ஆற்றல் அல்லது சுயநினைவில் (mental capacity) இல்லை என்பதும் தெரிய வந்தது. 

 

 

அந்த நேரத்தில், எனக்கு ஒரு கடினமான செய்தியை சொல்ல வேண்டியது ஏற்பட்டது: அவரது தாயார் தற்போது உயில் எழுத முடியாத நிலையில் உள்ளார் என்பதாகும். 

ஒரு செல்லுபடியாகும் உயில் முக்கியமான சட்டப்பூர்வமான கோரிக்கைகளில் ஒன்று, “testamentary capacity”, அதாவது உயில் எழுதும் நபர் மனநிலை தெளிவாக இருத்தல் வேண்டும், மற்றும அவர் கையெழுத்திடும் ஆவணத்தின் உண்மை அர்த்தம் மற்றும்  விளைவுகளை முழுமையாக புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும்.

இந்த குடும்பத்தில் உயில் எழுத அத்தியாவசியமான ஆவணங்கள் இல்லாததால், உயில் எழுத முடியாது. 

பிறகு, அடுத்த படியாக என்ன நடக்கும் என்பதை நான் அவர்களுக்குச் சொன்னேன். 

ஒருவர் உயில் எழுதாமல் மரணமடைந்தால், அவரது சொத்துக்கள் (intestacy) எனப்படும் ‘இருக்கும் நிலையில் சொத்து பங்கீடு’ விதிகளுக்கு உட்பட்டுவிடும். 

இதற்காக குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ‘Letter of Administration (L.A.)’ அதாவது நிர்வாகக் கடிதம் என்பதனை விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இது ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கை. இதில் ஒருவருக்கோ அல்லது ஒருவருக்கு மேற்பட்டவர்களுக்கோ சொத்துக்களை நிர்வகிக்க ஒரு நிர்வாகி (Administrator) நியமிக்கப்படுவர்.

இந்த விண்ணப்பம் தொடர, அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் அந்த நிர்வாகிகளின் நியமனத்திற்கு ஒருமித்த ஒப்புதல் தர வேண்டும். இந்த குடும்பத்தில், மனைவியும் அவரது ஐந்து பிள்ளைகளும் இருக்கின்றனர். 

ஆனால், மேலும் ஒரு அவசியமான நிபந்தனை தேவைப்பட்டது. 

நான் அவர்களிடம் சொன்னேன், அவர்களின் தாயாரின் பெற்றோர்கள் இருவரின் மரண சான்றிதழ்களும் வழங்கப்பட வேண்டும் என்று. 

அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்களது தாயாரின் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்களது  தாயார் சிறு வயதாக இருக்கும்போதே  இறந்துவிட்டனர். குடும்பத்தினருக்கு பாட்டி தாத்தாவின்  முழுப்பெயர்களும் தெரியாது; அவர்கள் பற்றிய விவரங்களும் முற்றிலும் தெரியவில்லை. 

நான் இதற்கான காரணத்தை விளக்கினேன்.

மலேசிய Distribution Act 1958 (1997 Amendment) அடிப்படையில் ஒருவர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், ஆனால் அவருடைய பெற்றோர்களோ உயிருடன் இருந்தால், சொத்து பங்கீடு பின்வருமாறு அமையும்:

  • பெற்றோர்களுக்கு – ¼
  • கணவர்/மனைவிக்கு – ¼
  • பிள்ளைகளுக்கு – ½

ஆனால், பெற்றோர் அவருக்கு முன் இறந்திருந்தால்:

  • கணவர்/மனைவிக்கு – 1/3
  • பிள்ளைகளுக்கு – 2/3

அதாவது, பெற்றோர் இறந்துவிட்டார்கள் என்பதை நிரூபிக்கவே அந்த மரணச் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றது.

இவை எளிதாக கிடைக்கவில்லை என்றால், குடும்பத்தினர் நெருங்கிய உறவினரின்  சத்தியப்பாரம் (Affidavit of the Next of Kin) மூலம் அதை விண்ணப்பிக்கலாம்.

இது ஒரு சட்டப்படி உறவினர் அல்லது சொத்து மீதான உரிமை உள்ள நபர் கொடுக்கும் எழுத்து பூர்வமான சத்தியப்பிரமாணம், அதில் மரண சான்றிதழ் இல்லாத நபர் உண்மையில் இறந்துள்ளார் என உறுதி செய்யப்படுகிறது. 

அனைத்து வாரிசுகள் ஒப்புதல் அளித்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, நீதிமன்றம் மேலும் இரண்டு உத்தரவாதம் அளிப்பவர்களை (Guarantors) நியமிக்குமாறு கேட்கும். 

இவர்கள் சொத்துகள் முறையாக நிர்வகிக்கப்படுவதற்கான நிதி உத்தரவாதத்தை வழங்க வேண்டும்.  இது நிர்வாகி சொத்துகளை தவறாக  நிர்வகிப்பதை அல்லது மோசடியைத் தடுக்கும் பாதுகாப்பு நெறிமுறையே ஆகும். 

இந்த எல்லா நிபந்தனைகளும் பூர்த்தியாகும் வரை, சொத்துக்கள் சட்டப்படி பங்கிடப்பட மாட்டாது. 

இது நான் சந்தித்த பல பிரச்சனைகளில் ஒன்றே.

ஒரு நபர், சுய நினைவை இழப்பதற்கு முன் உயில் எழுதவில்லை என்றால், அவருடைய குடும்பம் கடினமான சட்ட நடைமுறைகளை எதிர் நோக்க வேண்டிய சூழல் ஏற்படும். 

முக்கிய ஆவணங்கள் இல்லாததால், சுலபமாக செய்யக் கூடிய காரியங்கள் காலம் தாழ்த்தி பல இன்னல்களை எதிர் நோக்கும் சூழல் உருவாகுகிறது. 

ஆனால், இந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் ஒரு எளிய முறையில் தவிர்க்கலாம்: உங்கள் மனநிலை தெளிவாக இருக்கும் போதே உயில் தயாரித்துக் கொள்வதே அந்த முறை.  

ஒரு உயில் எழுதுவதற்கு:

  • உங்களுக்கு விருப்பமான நிர்வாகிகளை நியமிக்கலாம்
  • சிறு வயது பிள்ளைகளுக்கு பாதுகாவலர்களை நியமிக்கலாம்
  • உங்கள் சொத்துக்கள் உங்கள் விருப்பப்படி எப்படி பங்கிடப்பட வேண்டும்
    எனத் தீர்மானிக்கலாம்.

உயில் தயாரிக்க சிறந்த நேரம் உங்கள் உடல்நிலை மோசமடைந்து பாதிக்கப்பட்ட நிலமை அல்ல. மாறாக உயில் எழுதுவதற்கு சிறந்த தருணம் எதுவென்றால் உங்கள் மனநிலை தெளிவாக இருக்கும்போதே அந்த முடிவுகளை எடுக்கக் கூடிய தருணமே.

ஏனெனில் இறுதியில் நமக்குக் கிடைப்பது…… 

ஒரு தருணமே.