இன்றைய காலக்கட்டத்தில், கைப்பேசிகள் நம் தினசரி வாழ்க்கையின் மிக முக்கியமான சாதனமாக மாறியிருக்கின்றன. நம்முள் பலருக்கு, காலையில் விழித்ததும் முதலில் தொடுவது தேநீர் அல்ல , கைப்பேசியே. நாள் முழுதும் வேலைக்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ எப்போதும் நம் கையில், சட்டைப்பையில் அல்லது நம் அருகில் இருப்பது கைப்பேசியே. ‘நீயின்றி என்னால் சிரிக்க இயலாது’ என்று கைப்பேசியிடம் சொல்லும் மனநிலைக்கு நாம் வந்து விட்டோம்.
ஆனால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் கைப்பேசி, நமது சொத்துப்பத்திரத்தில் இடம் பெறாதது ஒரு வேடிக்கையான எதிர்மறை விடயமாக உள்ளது.
ஏன் ?
நாம் இதுவரை கைப்பேசியை ஒரு சொத்தாகப் பார்க்காமல் இருந்திருக்கலாம். அதில் உள்ளடங்கியுள்ள தகவல்கள் நமது மதிக்கத்தக்க இலக்கவியல் சொத்து என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏன் இலக்கவியல் சொத்துகள் முக்கியம்
பெரும்பாலோர் தமது சொத்துப்பத்திரத்தை எழுத நினைக்கையில், பணம் சம்பந்தட்ட சொத்துக்களான வங்கி கணக்கு, பங்கு முதலீடு ,காணும் சொத்துக்கள் , தனியார் நிறுவன முதலீடு போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள். இவை உறுதியான மற்றும் பரிச்சயமானவை ஆகும்.
இன்றைய வாழ்க்கை ஓர் இலக்கவியல் காலமாகும். தற்சமயம் பெரும்பாலான சொத்துகள் இலக்கிய வடிவிலேயே இருப்பதை நாம் அறிய வேண்டும். அதைப் பற்றி யோசிப்போம்.
- மின் பணப்பைகள் (Touch ’n Go, Boost, GrabPay)
- கிறிப்தோ பணப்பைகள் மற்றும் இலக்கவியல் நாணயம்
- மேகச் சேமிப்பகம் (Google Drive, iCloud)
- பொது ஊடகக் கணக்கு (Facebook, Instagram, LinkedIn)
- இயங்கலை நேரடி வர்த்தகம் (Forex, stocks, digital platforms)
இந்த இலக்கவியல் சொத்துகள் அனைத்துமே நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்.இவை அனைத்தும் உண்மையான , மதிப்புமிக்க , சில வேளைகளில் அசையும் சொத்துக்களை விட கண்டுபிடிக்க கடினமான சொத்துக்களாக விளங்கும். குறிப்பாக பிறர் இந்தச் சொத்துக்களை அறியாத சூழலில்.
ஒரு சோகம் சொல்லும் பாடம்
சமீபத்தில் நடந்த இந்தியாவின் விமான விபத்தில் சுமார் 260 உயிர்கள் பலியாயின. இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் நம் வாழ்க்கையில் நடக்கலாம், இது கண நேரத்தில் அனைத்தையும் நாம் இழக்கலாம் என்பதற்கான ஒரு கடுமையான நினைவூட்டல் ஆகும். செய்திகளில் , பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தங்கள் நேசித்தவர்களின் உடலைத் தேடிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது நம் மனம் அடையும் வேதனை சொல்ல முடியாது. இது போன்ற சம்பவங்கள் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி மின்னல் போல் நம்மைத் தாக்கும்; ஆழ்ந்த துயரத்தில் வீழ்த்தும்.
இந்த உணர்வுப்பூர்வமான இழப்பிற்குப் பிறகு, இன்னொரு பெரிய சவால் ஆரம்பமாகிறது: மறைந்தவரின் சொத்துகளை மீட்டெடுப்பது ஆகும். காணும் சொத்துக்களைக் கண்டுபிடிப்பதே மிகக் கடினம். இலக்கவியல் சொத்துகள் குறித்த எந்தவோர் எழுத்துப்பூர்வமான பத்திரமும் இல்லையெனில், அவை மீண்டும் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போகக்கூடும்.
ஒரு சொத்துப் பத்திரத்துடன் ஆரம்பிக்கவும்
உங்களது அன்பானவர்களைப் பாதுகாக்க ஒரு சிறந்த வழி சொத்துப்பத்திரம் (will) எழுதுவதே. அதில் நீங்கள் உங்கள் சொத்துக்களை நிர்வகிக்க மற்றும் பகிர வழங்கும் நம்பிக்கையுள்ள நிர்வாகிகள் மற்றும் அறங்காவலர்களை (Executors & Trustees) நியமிக்கலாம்.
இந்தியாவின் விமான விபத்தைப் போல ஒரு பேரழிவில், முழு குடும்பமே பாதிக்கப்பட்டால்?
- யார் மாற்று நிர்வாகியாக அல்லது அறங்காவலர்களாக ஆவார்கள்?
- உங்களை அடுத்து பங்குரிமைப் பெறும் குடும்ப உறுப்பினர் இல்லாத நபர் யார்?
- ஓர் இளம் தம்பதியர் சிறு குழந்தைகளை விட்டுச் சென்றால் யார் அவர்களுக்குப் பாதுகாவலர்களாக நியமிக்கப்படுவர்?
இவை எளிதான கேள்விகள் அல்ல, ஆனால் அவசியமானவை.
இந்த அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டபின், அசையும் மற்றும் அசையாச் சொத்துகளின் பங்கீட்டுக்குத் திட்டமிடலாம்.
உங்கள் இலக்கவியல் சொத்துகளை மறக்க வேண்டாம்
சொத்துரிமைகளை நிர்வகிப்பதில் பெரும்பாலும் தவறவிடப்படும் முக்கியமான பகுதி இலக்கவியல் சொத்துகளாகும். இவை பூர்வீகச் சொத்துகளைப் போல முக்கியம் வாய்ந்தவை. எனவே, இதற்குச் சிறப்பு கவனத்திற்கு உரியவையாகும்.
நீங்கள் செய்ய வேண்டியவை இதோ:
- இலக்கவியல் நிர்வாகியை நியமிக்கவும்
உங்கள் இலக்கவியல் சொத்துகளுக்கும் கணக்குகளுக்கும் அணுகும் நபர் இவராக இருக்க வேண்டும். இவர் அந்தத் தகவல்களை மீட்டெடுத்து, சரியான கடவுச் சொல்லையும் மற்றும் கடவு எண்ணையும் பரிவர்த்தனை செய்பவரிடம் வழங்குவார். - உங்கள் இலக்கவியல் விபரங்களைப் பதிவு செய்யவும்
உங்களின் கடவுக் குறிப்பு , கடவுச் சொற்கள் அல்லது மீட்டல் குறிப்புப் போன்றவற்றை ஒரு மடிக்கணினி அல்லது கோப்புகளில் திடமாக எழுதி வைக்கவும். அதை வீட்டில் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். நீங்கள் நியமித்த நபருக்கு அது எங்கு உள்ளது என்பது பற்றி கண்டிப்பாக தெரிந்திருப்பதை உறுதி செய்யவும். - அதை நிரந்தரமாக புதுப்பிக்கவும்
இலக்கவியல் தகவல்கள் அடிக்கடி மாறும். அதனால் அந்தத் தகவல்களை அறிந்து புதுப்பித்து வைப்பது முக்கியம்.
இந்த மாதிரியான திட்டமிடல் இல்லாவிடில், உங்களால் உருவாக்கப்பட்ட கணக்குகள், அணுக இயலாத நிதிகள், அல்லது முக்கியமான தனிப்பட்ட தரவுகள் எப்பொழுதும் இழக்கப்படும் வாய்ப்புகளைச் சந்திப்பீர்கள். அந்த மதிப்புநிறை சொத்துகளும் தரவுகளும் காற்றில் அழிந்துபோவதற்கான வாய்ப்பும் உள்ளது. ‘நீ இன்றி சிரிக்க முடியாது’ என்று கூறிய சாதனம், இப்போது மற்ற யாரும் திறக்க முடியாத ஒன்றாக மாறிவிடும்.
இறுதிச்சிந்தனைகள்
நாம் இலக்கவியல் காலத்தில் வாழ்கிறோம். ஆனால் நம் சொத்துடமை பதிவு இன்னும் எழுத்துருவிலேயே உள்ளது. இந்த விரிசலை விரைவில் நாம் சீர்செய்ய வேண்டும். உங்களின் கைப்பேசி ஒரு ஊடகப் பொருள் மட்டுமல்ல. அது இலக்கவியல் சாவிகளும் , நினைவுகளும் , செல்வங்களும் அடங்கிய ஒரு மின்வாழ்வகமாகும்.
அதனால் இப்போதே செயல்படுங்கள். திட்டமிடுங்கள். இது முதியவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமல்ல. இது உங்களை நெருங்கி நேசிப்பவர்களுக்காக. நீங்கள் இன்றி அவர்களால் சிரிக்க முடியாது” என்று உணர்பவர்களுக்காகவும்தான்.
“இன்று எனக்கு ஏதாவது நேர்ந்தால், என் குடும்பத்தினருக்கு என்னுடைய அனைத்து இலக்கவியல் சொத்துகள் எங்கு இருக்கின்றன என்பது தெரியுமா?”